அப்பா செய்த பாவம்
Shobha Thiban
NTU Business Student
Submission for May Kathaikalam 2019
அப்படி ஒரு வார்த்தையைக் கேட்டவுடன் இதயம் கனத்து இதயத்துடிப்பு நின்ற தோரணை தோன்றியது. "உன் அப்பா என்ன பாவம் பன்னாரோ இப்போ நீ இப்படி வந்து நிக்கிறே!" என் கண்ணீரின் வெப்பத்தை உணர்ந்து அதிர்ச்சியிலிருந்து மீண்டு வந்தேன். என் அறைக்கு விரைந்து என் அலமாரியை திறந்தேன். ஆடைகளாவது அலங்காரமாவது! என் ஆயுதத்தை தேடினேன். மூச்சை எடுக்கும் என் ஆயுதம் என் கையில் கிடைத்தால் தான் என்னால் சுவாசிக்க முடியும் என்று நினைத்தேன். அந்த குளிரான இரும்பு என் விரலில் பட, அதை இறுக்க பிடித்துக்கொண்டேன். அறை என்ற பெயரில் நான் வாழ்ந்துக்கொண்டிருந்த சிறையின் ஓரத்தில் அமர்ந்தேன்.
ஒன்று.
இரண்டு.
மூன்று.
சிவப்பு.
யார் செய்த பாவமோ?
யார் செய்த பாவமோ?
யார் செய்த பாவமோ?
முக்கோண கதையை எண்னி கண்களை மூடிக்கொண்டேன்.
பாகம் ஒன்று.
நான்கு நாள் பயனத்துக்கு பிறகு, பாண்டியனும் அவன் மனைவி கண்ணம்மாவும் கப்பலிலிருந்து சிங்கை மண்ணில் இறங்கினார்கள். எழுத படிக்க தெறிந்திருந்ததால், பிரிட்டிஷ் ஆட்சியின் போது அவர்களிடம் அதிகளவு துன்பப்படாமல், பாண்டியன் அவர்களுக்கு கணக்கு வேலை செய்து ஓரளவுக்கு வசதியாக மதுரையில் வாழ்ந்து வந்தார். ஆனால், இந்தியா சுதந்திரம் பெற்றதும், கணவன் மனைவி இருவரும் சில வருடம் சிங்கையில் தங்கி, வேலை செய்து, இந்தியாவுக்கு பணக்காரர்களாக திரும்பலாம் என திட்டமிட்டனர். புது நாட்டில் வந்து இறங்க, புது வாழ்க்கையை தொடங்கினர்.
சிறிய வீட்டில் ஒவ்வொரு காலையும் மணியோசை. சாம்பிராணி மணத்துடன் காப்பி மணமும் கலந்து வீசியது. சமையல் அறையில் கோப்பைகளும் பாத்திரங்களும் பறக்க, மற்ற அறையில் சீப்பும் சட்டையும் பறந்தது. எவ்வளவு பரபரப்பாக கடன்களை செய்தாலும், வாசலிள் ஒரு நொடி இருவரும் சிரித்துக்கொண்டு நின்றனர். தன் கணவன் வேலைக்கு புறப்பட்டு செல்லும் அழகை கண்ணம்மா வாசல் ஓரமாய் மறைந்திருந்து ரசித்தாள். சமையல், சுத்தம் என பொழுது தாண்ட, கண்ணம்மா மீண்டும் வாசல் ஓரம் தன் கணவனின் வருகைக்காக ஆவலாக காத்திருந்தாள். பாண்டியனும் அவளுடைய சிரிப்பைக் காணவே விரைந்து வீட்டிற்கு வந்தான். நாட்கள் இப்படியே செல்ல, ஒரு வருடத்திற்கு பிறகு வீட்டில் குழந்தை அழும் சத்தமும் கேட்டது!
அன்பு வாழும் கூடுகள் அதில் வாழும் குருவிகளால் அழிவதில்லை. எங்கிருந்தோ வரும் கழுகுகளால் தான் அழியும். கழுகும் குருவியும் சந்தித்த கதை தான் பாண்டியன் மற்றும் நாகம்மாவின் சந்திப்பு. ஊரே பேசும் அளவுக்கு அழகு. குயில் போன்ற இனிமையான குரல். பாண்டியன் எப்போது அவளை பார்த்தானோ, அப்போதே அவன் நிம்மதியை இழந்தான். தன் குடும்பத்தின் மீது அக்கறை கொண்டிருந்தாலும், நாகம்மாவை பார்க்க வேண்டும், அவளுடைய குரலால் தன் பெயரை கேட்க வேண்டும் என துடித்தான். மெல்ல மெல்ல சாக்குக் கூறி நாகம்மாவை பார்த்து பேச முயன்றான். சில நாட்களுக்கு பிறகு சாக்கு கூறாமலே இருவரும் சந்திக்க தொடங்கினர்.
இது கண்ணம்மாவுக்கு தெரியவந்தது. கத்திக் கூச்சலிட்டு, நியாயம் கேட்டு, பாண்டியனை அவமானப்படுத்த எல்லா தகுதியும் இருந்தாலும், கண்ணம்மா அவ்வாறு எதையும் செய்யவில்லை. "உங்களோட மகிழ்ச்சி எனக்கு முக்கியம். நீங்க என்னிக்கும் எங்கள கை விட மாட்டீங்க-னு எனக்கு தெரியும்," என்றாள். 'கண்ணகியும் மாதவியும் ஒரே வீட்டிலா தங்குவாங்க?' என நாகம்மா கேட்க, பாண்டியனும் கண்ணம்மாவையும் அவர்களின் மகன் ராஜாவையும் மீண்டும் இந்தியாவுக்கே அனுப்பி வைத்தான்.
தன் கனவன் தன்னையும் ராஜாவையும் கைவிட மாட்டார் என்ற நம்பிக்கையுடன் இந்தியாவுக்கு சென்ற கண்ணம்மா சந்தித்த கஷ்டங்களுக்கு அளவில்லை. பாண்டியன் அவர்களை நலன் விசாரித்து கடிதம் எழுதினாலும் அவர்களை வந்து பார்க்கவே இல்லை. பணம் அனுப்பினாலும் அது வருடத்தில் மூன்று முறை ஒரு சிறிதளவு தான் அனுப்பி வைத்தான். கனவனுடைய பெயரை காப்பாற்ற, பெற்றோரிடமிருந்து தன் கஷ்ட்டத்தை கண்ணம்மா மறைத்தாள். ஊரே அவளைப் பற்றி பேசினாலும், அவளுக்கு மனம் விட்டு பேச யாரும் இல்லை. தன் மகன் தான் இனி எல்லாம் என அல்லும் பகலும் வேலை செய்து ராஜாவை படிக்க வைத்தாள். ராஜாவும் ஒரு திறமையான வாலிபனாய் வளர்ந்து வந்தான்.
சிங்கப்பூரில் பாண்டியன் வாழ்ந்து வந்த வாழ்க்கையும் நிம்மதி இல்லாத ஒன்றாக இருந்தது. நாகம்மாவை நன்றாக பார்த்துக்கொண்டான். தன் புது மனைவியை எக்குறையும் இல்லாமல் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என பாடுபட்டான். ஆனால், அவளுடைய ஆடம்பர ஆசைகளை பூர்த்தி செய்ய முடியவில்லை. இதை குத்திக்காட்டி நாகம்மா பேசிய விதம் பாண்டியனின் மனதை புன்படுத்தினாலும் காதலின் பெயரில் பொறுத்துக்கொண்டான். அவர்களுக்கு சேகரன், சிவா மற்றும் செல்வம் என மூன்று ஆண்மகன்கள் பிறந்தனர். பிள்ளைகள் பிறந்தப்பின் நாகம்மாவின் கட்டுப்பாட்டிலேயே பாண்டியன் இருந்தான். “மூனு ஆண் சிங்கங்கள இங்க வெச்சிக்கிட்டு ஊருக்கே பணம் கொடுத்தா என் மகன்களுக்கு என்ன ஆகும்?! ஒன்னு ரெண்டு மாசம் பணம் கொடுக்காட்டி ஒன்னும் ஆகாது!” என்று ஒவ்வொரு மாதமும் கத்தி கூச்சளிட்டு பாண்டியனை வாயடைத்தாள். இப்படியே பாண்டியனும் இந்தியாவில் இருந்த குடும்பத்தை கண்டுக்காமல் வந்தான். ஒவ்வொரு நாளும் தான் உணர்ந்த வலியை மதுவில் கொட்டினான்.
வருடங்கள் கழிந்தன. பாண்டியனுக்கு 70 வயது. அவனுடைய மகன்கள் அனைவரும் வளர்ந்து மனைவி, குழந்தைகள் என வாழ்ந்துக்கொண்டிருந்தனர். பாண்டியனின் குடி பழக்கத்தை வெறுத்த நாகம்மா அவனிடம் பேசியே வருடங்கள் ஆகிவிட்டன. அவன் சம்பாதித்த பணம் கொஞ்சத்தை குடித்தே முடித்திருந்தாலும், சேமித்து வைத்திருந்த பணத்தை எல்லாம் மகன்களுக்கு வீடு வாங்கவோ வியாபாரம் தொடங்கவோ கொடுத்திருந்தான். ஆனால், இப்போது மூன்று மகன்களில் ஒருவரும் அவனுக்கு தங்க வீட்டில் இடம் கொடுக்கவில்லை. குடி பழக்கம், குடும்ப செலவு என ஒவ்வொரு மகனும் கதை சொல்லி அவனை கைவிட்டனர். இந்தியாவில் இருந்த தன் குடும்பத்தை அழைக்கவே பாண்டியனுக்கு வெட்கமாக இருந்தது. இப்போது நலன் விசாரிக்கக் கூட யாரும் இல்லை.
தனியாக அமர்ந்தான். மதுவின் எரிச்சல் தொண்டைக்கு தெரியவில்லை. தண்ணீரை போல் குடித்தார். “எல்லா என் அப்பா செஞ்ச பாவம்! எனக்கு மட்டும் அவர் இன்னும் காசு விட்டு வெச்சிருந்தா எனக்கு இந்த நிலமை வந்திருக்குமா? பிள்ள மேல அக்கறையே இல்ல!”
பாகம் இரண்டு.
கண்ணாடி சிதறி உடையும் சத்தம் இரவின் அமைதியை சிதைத்தது. சேகரன் தலையனையை இறுக்க பிடித்தான். அவன் தந்தை தினமும் குடித்துவிட்டு செய்த கொடுமையை அவனால் பொறுக்க முடியவில்லை. வீட்டில் தான் கொடுமையென்றால் பள்ளியிலும் நிம்மதியில்லை. திருமணமான ஆணை அவன் அம்மா மணந்துக்கொண்டதை வைத்து அவனை கேலி செய்தனர். சில ஆசிரியர்களும் அவனை கீழ்த்தனமாக பார்த்தனர். அந்த இளம் மனதில் எவ்வளவு பாரம் இருந்தாலும் அதை அனைத்தையும் தன் குடும்பத்திடமிருந்து மறைத்தான். முதல் மகனாக, ஒரு அண்ணனாக, தன் அம்மாவுக்கும் தம்பிகளுக்கும் நம்பிக்கை கொடுத்து, அவர்களை பார்த்துக்கொள்ளும் பொறுப்பை ஏற்றுக்கொண்டான்.
எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும், தன் உணர்வுகளை முயற்சியாக மாற்றினான். வீட்டின் பிரச்சனைகளிலிருந்து படிப்பு அவன் கவனத்தை பறித்தது. எல்லா பாடங்களிலும் சிறந்த மாணவனாக விளங்கிய சேகரனை பற்றிய பேச்சு பரவியது. முதல் முறையாக தன் குடும்பத்தை கேலி செய்யாமல் சிலர் அவனை பாராட்டி வந்தது அவனுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது. உச்சி குளிர்ந்து இந்த விஷயத்தை அன்னையுடன் பகிர்ந்துக்கொள்ள வீட்டிற்கு விரைந்தான். “அம்மா! அம்மா!” என்று அலரி பரபரப்பாக நடந்ததை அம்மாவுடன் பகிர்ந்துக்கொண்டான். தன் மகனின் சிரிப்பு நாகம்மாவுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும், அதை கொண்டாடும் நிலமையிலும் அவள் இல்லை. ஒரு சிறு சிரிப்புடன் தன் மகனின் தலையை தடவினாள். செந்தாமரை போல் பூத்திருந்த சேகரனின் முகம் வாடியது.
அன்றிறவு, சேகரன் அழ்ந்த சிந்தனையில் இருந்தான். படிப்பில் கவனம் செலுத்தி சாதனை படைத்து ஒரு நல்ல வேலையில் சேர்வது தான் அவன் லட்சியம். ஆனால், அந்த லட்சியத்தை அடைய அவனுடைய குடும்பம் அவனுக்கு உதவ முடியாதே! “குடும்பம் குடும்பம் என்று பாடுபடுகிறேனே, அந்த குடும்பத்தால் எனக்கு என்ன செய்ய முடியும்?” என யோசிக்க தொடங்கினான். சுய சிந்தனை மனதை கௌவியது. எதார்த்தமாக இதை அவன் ஒரு ஆசிரியரிடம் கூற, ஆசிரியரும் அவர் குடும்பத்துடன் வாழ்ந்து படிக்க வாய்ப்பு உண்டு என்றார். சேகரனும் யோசிக்காமல் அன்றிறவே தன் பொருட்களை எடுத்து வீட்டை விட்டு ஓடினான். தன் அன்னையின் கண்ணீரை கடைசியாக ஒரு முறையாக துடைத்த சேகரன், அவன் குடும்பத்தை கைவிட்டு அவர்களுடைய பல கண்ணீர் அலைகளுக்கு காரணமானான்.
பல நாட்களுக்கு பிறகு நிம்மதியாக தூங்கினான் சேகரன். புது வீட்டின் நிம்மதியான சூழல் அவனுக்கு படிக்க உகந்ததாக அமைந்தது. ஒவ்வொரு நாளும் தன் அம்மாவுடைய நினைவு வரும் போது, அவளை கைவிட்டு வந்த குற்ற உணர்ச்சி இருந்தாலும், தன் வாழ்க்கைக்கு தான் செய்தது தான் சரி என்று நியாயப்படுத்திக்கொண்டான். இப்படியே காலம் போக, சேகரன் படிப்பை முடித்துவிட்டு வேலைக்கு செல்ல தொடங்கினான். வீட்டில் இடம் கொடுத்து, தன்னை குடும்பத்தில் ஒருவனாக வளர்த்த தன் ஆசிரியரிம் பாதி சம்பளத்தை கொடுத்து வந்தான். ஒரு இளம் ஆனாக, சேகரன் தீபாவை திருமணம் செய்துக்கொண்டு ஒரு தனி வீட்டிற்கு சென்றான்.
தீபா சேகரனின் குடும்ப நிலையை பற்றி அறிந்தாள். அவனுடைய குடும்பத்தை பற்றி கேள்விப்பட்டிருந்த தீபாவின் பெற்றோர் அவளை எச்சரித்தனர். தன் பெற்றோருடன் பல நாட்கள் போராடிய பிறகே இருவருக்கும் திருமணமானது. அவர்களுக்கு மீரா என்ற அழகான பெண் குழந்தை. ஒரு நாள், தீபா தன் கணவனிடம், "கேக்குரேன்னு தப்பா நினைக்காதீங்க… இது வரைக்கும் நா உங்க கிட்டே பெருசா ஒன்னும் கேட்டதில்லை… ஆனா, எப்படியாவது உங்க குடும்பத்தினரோட பேச பாக்குரீங்கலா? நம்ம குழந்தைக்கு எல்லா சொந்தக்காரங்களும் இருக்கனும். அதுக்காக தான்.." என்று கூறினாள். சேகரனும் ஒத்துக்கொண்டான். தன் குடும்பத்தினருடன் பேச முயற்சி செய்தான்.
சேகரன் இரு தம்பிகளிடமும் பேச முயன்றான். அவமானம் தான் மிஞ்சியது. 'இத்தனை நாளாக உனக்கு குடும்பம் என நாங்கள் இருப்பது நினைவில் இல்லையா? நம்மை சுமந்து பெற்ற தாயின் மீது உனக்கு கொஞ்சம் கூட அக்கறை இல்லையா? உனக்கு தேவைபடும் போது மட்டும் குடும்பமாக தெரிகிறோமா?' என்று அவர்கள் கேட்ட ஒவ்வொரு கேள்வியும் அவன் மனசாட்சியை கொன்றது. அவர்களுடைய தாயை பார்க்கும் தகுதி இல்லை என்று கூறி சேகரனை நாகம்மாவிடமிருந்து ஒதுக்கி வைத்தனர்.
இப்படி மொத்த குடும்பத்தையும் இழந்து நின்ற சேகரன், தன் மகளுக்கு ஒரு நல்ல தந்தையாக இருக்க முடியவில்லையே என்று எண்ணி அழுதான். “எல்லாம் அந்த அப்பா செய்த பாவம்! எனக்கு மட்டும் படிச்சி முன்னேற ஒரு நல்ல வாழ்கை அமைச்சி கொடுத்திருந்தா எனக்கு இந்த நிலமை வந்திருக்குமா? பிள்ள மேல அக்கறையே இல்ல!”
பாகம் மூன்று.
மீரா துணியை பைக்குள் வைத்தாள். "அழகா இருக்குற சட்டையெல்லாம் போட கூடாதுனா?! இந்த காலத்துக்கு ஏத்த மாதிரி எப்போ மாற போறாங்கலோ!" என்று தன் பெற்றோரை பற்றி எண்ணி பெருமூச்சி விட்டாள். பெற்றோர் கூறும் அனைத்தும் தன் சுதந்திரத்தை பறித்தது என்று நினைத்தாள். அவளுடைய பாதுகாப்புக்காக அவர்கள் சொன்ன விதிகளை அவள் மதிக்கவில்லை. அவர்கள் தடை செய்த ஒவ்வொரு விஷயத்தையும் அவர்களுக்கு தெரியாமல் செய்தாள். அவள் மீது கொண்ட நம்பிக்கையால் அவளின் பெற்றொருக்கு அவள் வாழ்ந்துக்கொண்டிருந்த இரட்டை வாழ்க்கை தெரியாமலேயே இருந்தது.
பல்கலைகழகத்தில் படித்துக்கொண்டிருந்த போது தான் மீரா, மதன் என்ற பையனை கண்டாள். அவன் அவளை தாண்டி நடந்த ஒரு கணம் ஒரு யுகம் போல் இருந்தது. இந்த அழகன் யாரோ என்ற வியப்புடனே தன் வகுப்புக்கு நடந்தாள். வகுப்பில் மீரா மும்மறமாக வேலை செய்துக்கொண்டிருந்த போது கைத்தவறி அவள் பேனா கீழே விழுந்தது. அதை எடுப்பதற்குள் இன்னொர் கை பேனாவை அவளிடம் நீட்டியது. மீரா தலை நிமிர்ந்து பார்க்க, மதன் அந்த பேனாவை பிடித்துக்கொண்டிருந்தான். மீராவால் நகரமுடியவில்லை. அவனின் புன்னகை அவன் கண்களிலே தெறிந்தது. கூர்மையான மூக்கு, மனதை உறுக்கும் சிரிப்பு. மீரா பேனாவை எடுத்துக்கொண்டு வெட்கத்துடன் திரும்பினாள்.
ஒரே வகுப்பில் இருந்ததால், இருவரும் சில நாட்கள் ஒன்றாக படித்தோ உணவு உண்டோ வந்தனர். இந்த நேரத்தில் மீராவுக்கு மதன் மீது இருந்த ஆசை வளர்ந்துக்கொண்டே வந்தாளும் அதை சொல்லாமல் மனதிலையே வைத்துக்கொண்டாள். அனால், ஒரு நாள் பேச்சுவாக்கில் மதன் தன் காதலியைப் பற்றி பேசினான். இதை திடீரென்று கேட்ட மீராவுக்கு உலகமே இருண்டுவிட்டதைப் போல் இருந்தது. கண்ணீர் துளிகள் வெளிவர துடித்தன. இதை எல்லாம் வெளியில் காட்டாமல் மனதிலையே மறைத்துக்கொண்டாள்.
ஒரு நாள் மதன் தலையை தொங்க வைத்து அமர்ந்திருந்தான். மீரா அவனை நலன் விசாரிக்க, தன் காதலியுடன் சண்டையிட்டதால் கோபமாக இருந்ததாக கூறினான். மீரா ஒரு நொடி யோசித்தாள். மதன் கோபத்தில் சரியாக யோசிக்காமல் பட்டென்று முடிவெடுப்பான் என்று அவள் அறிந்திருந்தாள். "இது தான் என் வாய்ப்பு" என்று நினைத்து பேச தொடங்கினாள். மதனுடைய காதலியின் மீது பழி சுமற்றினாள். மதனுக்கு அவள் மீது இருந்த கோபத்தை மீரா மேலும் தூண்டினாள். ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பார்கள். மதனும் ஒரு மூடனைப்போல் உடனே தன் காதலியை விட்டுப் பிரிந்தான்.
இதை தொடர்ந்து, சில மாதங்களுக்கு பிறகு மீரா மதனிடம் தன் காதலை தெரிவித்தாள். இருவரும் குடும்பத்தினருக்கு தெரியாமல் ரகசியமாக காதலிக்க தொடங்கினர். ஒரு நாள், மதன் மீராவுக்கு கொடுத்த ஒரு கடிதம் தீபாவின் கண்களில் தென்பட, உன்மையும் வெளிவந்தது. பெற்றோருக்கு தெரியாமல் ஒருவனை காதலித்ததற்காக மீராவை ஏசினர். ஜாதி, படிப்பு, குடும்பம் என காரணங்களை அடுக்கிக்கொண்டே போனார்கள். "நான் இங்க இருக்குற வரைக்கும் நீங்க இரண்டு பேரும் சேரக்கூடாது! சேர விடமாட்டேன்!" என்று கத்தி சேகரன் கோபமாக வீட்டை விட்டு கிளம்பினார். தன் கணவரின் கோபத்தால் பதறி போன தீபா, "உன் அப்பா என்ன பாவம் பன்னாரோ இப்போ நீ இப்படி வந்து நிக்கிறெ!" என்று அழுதாள்.
மீரா சிலையாய் நின்றாள். “எல்லா என் அப்பா செஞ்ஜ பாவம்! என்னை நம்பி எனக்கு சுதந்திரம் கொடுக்க கூடாதா?! பிள்ள சந்தோஷத்த பத்தி அக்கறையே இல்ல!”
இறுதி
'எல்லாம் என் அப்பா செய்த பாவம்.'
'என் மனைவியையும் மகனையும் ஊருக்கு அனுப்புகிறேன், எனக்கு நீ தான் வேண்டும்"
'எல்லாம் என் அப்பா செய்த பாவம்.'
'குடும்பம், என்ன குடும்பம்? என் வாழ்க்கை தான் எனக்கு முக்கியம்.'
'எல்லாம் என் அப்பா செய்த பாவம்.'
'அவனை நான் அடைந்தே தீர வேண்டும், அவளை அவன் வாழ்க்கையிலிருந்து நீக்க வேண்டும்.'
யார் செய்த பாவம்?
யார் செய்த பாவம்?
யார் செய்த பாவம்?
நான் செய்த பாவம்.
"மீரா! மீரா!"
கண்களை திறந்தேன். என் தாயாரின் அழகு முகம். எந்நாளும் நான் கவனிக்காமல் போன அழகு, இப்போது என் கண்களுக்கு தெரிந்தது. என் விரல்களால் அவர் கண்ணத்தை தொட, நான் பதித்த சிவப்பு அவர் தோல் மீது குங்குமம் போல் காட்சியலித்தது. மெல்ல சிரித்து கண்களை மூடினேன். சிவுப்பும் கருப்பாகியது.