top of page
Frozen Popsicles

அவன்

G Nanthinee Shree
NTU Communications Studies Student
1st Prize for June Kathaikalam Submission 2018

ஒரு மணி நேரம் கழித்தும் அவர்களின் முறை வரவில்லை.  தீபாவுக்கு இதற்கு மேல் காத்துக்கொண்டிருக்க முடியவில்லை. அவள் எழுந்து வரவேற்பாளரிடம் சென்று என்ன நடக்கிறது என கேட்க முடிவெடுத்தாள். அவளின் அவசரத்தை புரிந்துக்கொண்ட சக்தி அவளைச் சமாதானப்படுத்தி உட்கார கூறினான். அத்தருணத்தில் தாதியர் ஒருவர் தீபாவையும் சக்தியையும் உள்ளே அழைத்தார்.

ஓரு சிறிய அறையினுள் இருவரும் நுழைந்தனர். மருத்துவர் இருவரையும் சிரித்த முகத்துடன் வரவேற்றார்.

"வணக்கம் தீபா! உங்கள் மருத்துவ பரிசோதனையின் முடிவுகளைப் பார்த்தேன். கவலைப்படும் படி எதுவும் இல்லை!" என்று அவர் தீபாவுக்கு உறுதி அளித்தார்.

"நன்றி டாக்டர். அப்போ நான் கிளம்பலாமா?" என்று தீபா கூறியபடி அவசரஅவசரமாக எழுந்தாள்.

"என்னமா? அப்படி என்ன அவசரம்? பிரச்சனை ஒன்றும் இல்லை. You're pregnant!" என்று விவரித்தார் மருத்துவர்.

தீபாவின் அருகே அமர்ந்திருந்த சக்தி அவளை கட்டி அணைத்தான். இதெல்லாம் நடந்துகொண்டிருந்தபோது, ஒன்றும் பேசாமல் தீபா திகைத்திருந்தாள்.

தீபாவின் முகத்தைப் பார்த்த மருத்துவர், "எதாவது பிரச்சனை?" என்று வினவினார்.

"ஒன்றும் இல்லை!" என்று அவள் பதிலளித்தாள். அதற்கு பிறகு மருத்துவர் கூறிய எல்லாவற்றும் அவளால் ஜீரணிக்க முடியவில்லை. அவர் கூறிய விவரங்கள் எல்லாவற்றும் செவிடர் காதில் சங்கு ஊதியது போல் இருந்தது.

இந்த சந்தோஷ தருணத்தைக் கொண்டாட சக்தி தீபாவை அவர்கள் இருவரும் அடிக்கடி செல்லும் உணவகத்திற்கு அழைத்து சென்றான்.

"தீபா, என்ன ஆச்சி? ஏன் இப்படி பேய் அடஞ்ச மாதிரி இருக்கெ?" என்று சக்தி அவள் கரங்களை பிடித்துக்கொண்டு கேட்டான்.

தீபா ஒன்றும் கூறாமல் அவள் கைத்தொலைபேசியில் மூழ்கினாள்.

"என்னமா? சொல்லு!"

"நான் ஒரு அம்மாவாக தயாராக இல்லை."

"தீபா!"

"கத்தாத சக்தி!"

"என்ன தீபா இவ்வளவு சர்வ சதாரணமாக சொல்ர? நம்ம இதை பற்றி எத்தனை வாட்டி பேசிருக்கோம்! இப்ப வந்து பிள்ளை வேண்டாம்னு உளருரே?"

தீபா பெரு மூச்சிட்டாள்.

"இப்போதான் எனக்கு பிடித்த வேளையொன்றில் சேர்ந்துள்ளேன். அதற்குள்..." என்று தீபா தயக்கத்துடன் கூறினாள்.

"இவ்வளவு சயநல.." என்று கோபத்துடன் சக்தி குரலை உயர்த்தினான்.

"போதும் சக்தி! இதற்கு மேல் உன்கிட்ட பேசவதில் எந்த புன்னியமும் இல்லை!" என கூறினாள்.

தங்கள் இருவருக்குமே சிறுது இடைவேளி தேவை என அவள் சோகத்தோடு உணர்ந்தாள்.

அங்கிருந்து அவள் எழுந்து சென்றாள்.

இச்சம்பவத்தைக் கண்டு ஒரு வயதான பெண்மணி சக்தியை நோக்கி வந்தார்.

"உங்கள் இருவரையும் இங்கே அடிக்கடி பார்த்திருக்கிறேன்" என்று சக்தியிடம் அவர் கூறினார்.

தன் கோபத்தையும் தவிப்பையும் மறைக்க முயற்சி செய்துக்கொண்டு அப்பெண்மணியைக் கண்டு அவன் ஒரு புன்முறுவலிட்டான். 

"உங்க இருவரையும் பார்க்கும்போது சிறுவயதியில் என்னையும் என் கணவரையும் பார்ப்பதுபோல் இருக்கிறது. என் குடும்பத்தையும் என் வியாபாரத்தையும் எப்படி சமாளிக்கிறேன் என்று பலர் கேட்டுள்ளனர். இன்று நான் உணவகத்துறையில் இவ்வளவு சாதித்திருக்கிறேன் என்றால் அது என்னால் மட்டுமல்ல, என் கணவரின் ஆதரவினாலும் தான்!" என்று அவர் கூறினார்.

அதைக் கேட்ட சக்திக்கு ஒரு யோசனைத் தோன்றியது.

" ரோம்ப நன்றி, மேடம்!" என்று கூறிக்கொண்டே உணவகத்தை விட்டு அறக்க பறக்க சென்றான்.

வீட்டுக்குச் சென்றுக்கொண்டிருந்தபோது அப்பெண்மணி கூறியதைப்பற்றி நினைத்துக்கொண்டே சென்றான். எப்படி தீபாவின் மனதை மாற்ற வேண்டும் என அவனுக்கு தெரிந்தது.

படிப்பறையில் அவள் ஒரு புத்தகத்தை படித்துக்கொண்டிருந்தாள்.

அவளருகே அவன் அமர்ந்தான்.

தீபா இருக்கையிலிருந்து எழுந்தாள்.

"நான் வீட்டிலிருந்து குழந்தையைப் பார்த்துக்கொள்கிறேன்!" என்று சக்தி கூறினான்.

தீபா கேட்டதை நம்ப முடியாமல் சக்தியின் பக்கம் திரும்பினாள்.

"உனக்கு இது விளையாட்டாக தெரிதா? நான் வேலைக்கு சென்று நீ வீட்டில் இருந்தா எல்லாரும் என்ன சொல்வாங்க?" என்று பதற்றமும் கோபமும் கலந்த குரலில் கேட்டாள்.

"தீபா, நம் இருவருக்கும் தெரியும் இது எவ்வளவு பெரிய விஷயம் என்று. உனக்கும் இக்குழந்தை வேண்டும் என்று எனக்கு தெரியும்! மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று இன்று நாம் கவலைப்பட்டால், நாளை நாம் தான் கவலைப்படுவோம்!" என்றவன் ஆறுதல் கூறினான்.

"ஆனால்....."

"ஆனால் என்ன? இது நம்மிருவரும் நம் பிள்ளைக்காக எடுத்த முடிவு. It's common now, babe! கவலைப்படாதே! இந்த பயணத்தில் நம் இருவரும் பயணிக்கிறோம்."

தீபா கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்து சக்தியைக் கட்டி அணைத்தாள்.

bottom of page