top of page
Frozen Popsicles

மருமகன் வேண்டாம்

G Nanthinee Shree
NTU Communications Studies Student
1st Prize for May Kathaikalam Submission 2019

அப்படி ஒரு வார்த்தையைக் கேட்டவுடன் இதயம் கனத்து, இதயத்துடிப்பு நின்ற தோரணை தோன்றியது. எல்லோரும் வாய் அடைத்து போய் நின்றார்கள். அப்பா சட்டென்று எழுந்து தன் அறைக்கு சென்றார். அம்மா தன் சேலை முனையினால் தன் கண்ணீரைத் துடைத்த படியே அப்பாவைப் பின்தொடர்ந்தார். வினேய் அண்ணன் நாற்காலியில் தொப்பென்று விழுந்தார். தன் தலையை சுவரின் மீது சாய்த்தபடியே உட்கார்ந்தார். என் அக்காவோ தேம்பித் தேம்பி அழுதுக்கொண்டிருந்தார். நான் அவரைக் கட்டி அணைத்துக் கொண்டேன்.

 

தாம்புல தட்டுகள் மேசையில் வைத்தபடியே இருந்தன. வடை செய்ய அம்மா பயன்படுத்திய எண்ணெயின் சூட்டுக்கூட ஆறவில்ல. ஆனால், அதற்குள் என் வீட்டில் ஓர் எரிமலையே வெடித்துவிட்டது.

 

என் அக்காவின் பெயர் கயல். இந்த உலகத்தில் எனக்கு மிகவும் பிடித்த ஒருவர் என்று கூறினால் அது கயலாக தான் இருக்கும். அவள் சிரிக்கும் போது அவள் கன்னங்களில் குழி விழும் அழகு இருக்கே! அப்படி ஓர் அழகு. ஆனால், வயதில் தான் அவர் எனக்கு மூத்தவர். உயரத்தில் நான் தான் அவளுக்கு உயர்ந்தவள். இதைத் தவிர அவர் என்னையும் அண்ணனையும் விட எல்லா விதத்திலும் உயர்த்தவர். படிப்பாக இருக்கட்டும், நடனமாகட்டும், களரியாகட்டும், எல்லாவற்றிலும் அவர் சிறந்து விளங்கினார். அதோடு, அம்மாவும் அப்பாவும் என்ன கூறினாலும் மறுபேச்சு கூறாமல் கேட்பார். நானும் அண்ணனும் அவர்களுக்கு தலை வலி கொடுப்பதிலையே குறிப்பாக இருப்போம். அப்பா வெளிப்படையாக கூறாவிட்டாலும், கயல் தான் அவருக்கு பிடித்த பிள்ளை என்பது வீட்டில் உள்ள எல்லாருக்கும் தெரிந்த ரகசியம்.

 

இருபத்து மூன்று ஆண்டுகளாக என் பெற்றோருக்கு எவ்வித பிரச்சினையும் கொடுக்காத கயல், கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர்களின் ஒரே தலைவலியாக இருந்து வருகிறாள். அக்காவுக்கு இரண்டு வருடமாக அப்பாவும் அம்மாவும் மாப்பிளைப் பார்த்துக்கொண்டு வருகிறார்கள். இதுவரைக்கும் அக்காவைப் பார்க்க இருபது மாப்பிளைகளாவது வீட்டுக்கு வந்திருப்பார்கள். ஒவ்வொரு தடவையும் ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டி அந்த சம்பந்தத்தை ஏற்கமாட்டாள். எல்லா விஷயத்திலும் மறு பேச்சு பேசாதவள் இதில் மட்டும் அப்பா அம்மாவின் பேச்சுக்குப் பணையவில்லை. வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும் அல்லவா?

 

இருபத்து ஒன்றாவது மாப்பிள்ளையாக ரவின் வந்தான். அக்காவுக்கு ரவினைச் சிறு வயதிலிருந்தே தெரியும். ரவினுக்கும் அக்காவின் மேல் பிரியம் உண்டு. இம்முறை அவளால் எந்தவொரு சாக்கு போக்கும் கூற முடியவில்லை. அக்காவும் ரவினும் அதற்கு பிறகு பல முறை சந்தித்துக்கொண்டார்கள். இரு வீட்டினரும் நிச்சயம் செய்ய முடிவெடுத்தனர்.

 

அம்மா தடபுடலாக ஒரு பெரிய விருந்தையே தயார் செய்துக்கொண்டுருந்தார். வடையை அப்பா உருட்ட, அம்மா பொரிக்க, வீடே கொண்டாட்டமாக இருந்தது. ஆனால்,  வந்ததிலிருந்தே ரவின் ஏதோ யோசனையில்

இருந்த படியே இருந்தார். அக்காவும் தன் அறையில் அங்கும் இங்கும் நடந்துக்கொண்டிருந்தார்.

 

நிச்சயத்தட்டை மாற்ற வேண்டிய நேரம் வந்தது.

 

“நிறுத்துங்க!” என்று ரவின் குரலிட்டார்.

“எனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை,” என்று கூறிவிட்டு வீட்டை விட்டுச் சென்றார். எல்லாருக்கும் ஒன்றும் புரியவில்லை. ரவினின் பெற்றோர் மன்னிப்பு கேட்ட படியே அங்கிருந்து சென்றனர். எல்லாரும் கிளம்பினர். ஆனால், ஒரு பெண்மணி மட்டும் இருந்தார். ரவினின் சொந்தமாக இருந்திருக்கலாம் என்று நான் நினைத்தேன். அக்கா அவரை நோக்கி நடந்தார். இருவரும் தங்களுடைய கைகளை இருக்கி பிடித்தார்கள்.

 

“She’s my girlfriend” என்று அக்கா கூறினார்.

 

அப்படி ஒரு வார்த்தையைக் கேட்டவுடன் இதயம் கனத்து, இதயத்துடிப்பு நின்ற தோரணை தோன்றியது. எல்லோரும் வாய் அடைத்து போய் நின்றார்கள்.

 

ஒரு மாதமாக என் வீடு ஓர் இழவு வீட்டைப் போல் இருந்தது. இந்த மௌனத்தை யாராலாலும் உடைக்க முடியவில்லை. நான் பலமுறை அக்காவுடன் பேச முயன்றேன். அவர் வீட்டில் இருக்கும் போதெல்லாம் தன் அறையைப் பூட்டிக்கொண்டு உள்ளே  அழுதுக்கொண்டிருப்பார்.

 

ஒரு நாள் அவர் பெட்டிப் படுக்கையை எடுத்துக்கொண்டு புறப்பட்டார். அண்ணனும் நானும் எவ்வளவு கூறியும் அவர் கேட்கவில்லை. என் பெற்றோரும் அவரைத் தடுக்கவில்லை. அக்கா தன் வண்டியின் கதவைத் திறந்தபோது, அவர் தோலை யாரோ தட்டினார். அப்பா.

 

அப்பாவின் முகத்தில் கண்ணீர் வடிந்தது. எதுவும் கூறாமல் அக்காவிடம் ஒரு தங்க வளையலைக் கொடுத்தார். அது என் பாட்டியுடையது. அப்பா அதை வீட்டின் மருமகளுக்குக் கொடுக்க பத்திரமாக வைத்திருந்தார். அதை அவளிடம் கொடுத்துவிட்டு எதுவும் கூறாமல் வீட்டிற்குள் சென்றார். இறுதிவரை அம்மா அக்காவைப் பார்க்க வரவில்லை. அக்காவை எற்றுக்கொள்ள இன்னும் எத்தனை ஆண்டுகள் எடுக்கும் என்று கூட எனக்கு தெரியவில்லை. அக்கா இல்லாமல், வீடே வெறிச்சோடிக் காணப்படுகிறது.

bottom of page