top of page
Frozen Popsicles

மௌனம்

Rubaneshwaran S/O Gnanasubramaniam
NTU Public Policies and Global Affairs Student
3rd Prize for June Kathaikalam Submission 2018

மௌனம் சூழ்ந்த அறையில் அவ்வப்போது வெளிப்பட்ட நிர்மலாவது புன்முலுவுகள் மட்டுமே காற்றை நிறப்பின. காலையிலிருந்து அவள் ஏக்கத்துடன் எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்த ஒரு குறுந்தகவல் கூட  இன்னும் வரவில்லை.  இரண்டு நாட்கள் கடந்தும் அவனின் தனியா கோபத்தை இது  குறித்தது. சிறிய ஒரு வாக்குவாதத்தில் தொடங்கிய  விரிசல் இன்று இந்த அளவிற்கு முற்றிவிட்டது. அவனிடம் நாளடைவில் வேருற்று இருந்த ஒரு வித தனிமையே இதற்குத் தூண்டுகோளாக இருந்தது.

படர்ந்த காடுகள். சலிப்பளிக்கும் விடுதி கட்டடங்கள். கடுமையான ராணுவ பயிற்சி. இதற்கு முன்பு காணா முகங்களோடு ஒரு அறையைப் பகிர்ந்துக்கொண்டு முழு நேரத்தையும் அவர்களோடு செலவழிக்க வேண்டிய கட்டாயச்சூழல்.இரண்டு வாரங்களாகியும் இந்த மாற்று சூழலை ஏற்றுக்கொள்ள அவனது மனம் மறுத்தது. இரவு நேரங்களில் எந்த வித கட்டுப்பாடுகளுமின்றி நிர்மலாவுடன் தொலைப்பேசியின் மூலம் பேசும் சுதந்திரமும் இப்போது அவனிடத்தில் இல்லை.

சுற்றி பலர் இருந்தும் அவனை விழுங்கிக் கொண்டிருந்தது அந்த தனிமை.  தனிமை, மிக கொடுமையான மனித உணர்வுகளில் ஒன்று. சில இரவுகள் உறங்க முடியாமல் தனிமையின் பிடியிலிருந்து விடுபட முடியாமல் போர்வைக்குள்ளே அழுவதை  பழக்கமாக்கிக்கொண்டான் அந்த இருவது வயது இளைஞன். ஆண்  அல்லவா. பலரின் முன்னிலையில் வெளிப்படுத்த முடியாத உணர்வு.   சமுதாயப் பார்வையில் இன்னும் முழுமையாக வரவேற்க முடியாத ஒன்று.  எவ்வலியையும் சகித்துக்கொண்டு கல்மனதை வெளிக்காட்ட வேண்டிய ஒரு  போலியான போக்கு. 

சரி அந்த வார இறுதியில்,  ஒரு நாள் ஓய்வின்போதாவது  அவளோடு  நேரத்தைக்  கழிக்க விரும்பினான்.  ஆனால் அவளுக்கோ நண்பர்களோடு வேறு திட்டங்கள் இருந்தன. தோழி வெளியூருக்குச் செல்வதற்கு முன்னர் அவளுக்காக ஒரு சிறிய கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்ய நினைத்தாள் நிர்மலா. அவளிடத்திலும் நியாயம் இருந்தது. கட்டுப்பாடுகள் மிகுந்த ஒரு பின்னனியிலிருந்து வந்து தனக்கென விரும்பிய உலகை இப்போது தானே அவள் செதுக்க தொடங்கியிருக்கிறாள். காதலானது எதிர்ப்பார்ப்புகள் அவளது சுதந்திரத்தைப்  மீண்டும் பறிப்பதில் அவளுக்கு உடன்பாடு இல்லை.

உணர்ச்சிவசப்பட்டு ஆதங்கத்தால் ஒரு சில வார்த்தைகளை அவள் தவறிவிட நேரிட்டது. ஆனால்  உடைந்துபோய் இருந்த அவனது  நெஞ்சிற்கு தேவையாக இருந்தது அவளது அரவணைப்பு. அவளுடைய கடும் சொற்கள் அல்ல. மௌனம். அந்த இரு முனைக் கத்தி! அன்று  சற்று மௌனம் சாதித்திருந்தால் இன்று அவளது இதயத்தைச் மெதுவாக  ஊடுருவிக்கொண்டிருக்குமா இந்த மௌனம். தங்கள் இருவருக்குமே சிறுது இடைவேளி தேவை என அவள் சோகத்தோடு உணர்ந்தாள்.

bottom of page