top of page
Frozen Popsicles

அவள் வருவாள்

Sunder Nagayah
NTU Digital Filmmaking Student
Submission for May Kathaikalam 2019

அப்படி ஒரு வார்த்தையைக் கேட்டவுடன் இதயம் கனத்து இதயத்துடிப்பு நின்ற தோரணை தோன்றியது. என்னுடைய துணிமணி, பொருட்கள், எல்லாம் பேக் செய்து வாசல் கதவை திறந்து கிளம்பினேன். கடைசியாக ஒரு முறை திரும்பி அவளைப் பார்த்தேன். என் கண்ணிலிருந்து ஒரு சொட்டு கண்ணீர் விழ, அவள் சிரித்துகொண்டே இருந்தாள். சந்தோஷம் என்ற உரிமை அதன் இஷ்டப்படி வந்துச் செல்லும். நான் போகும் பாதையில் இனிமேல்  சந்தோஷம் வருவதற்கு  நாள் எடுக்கும் என அறிந்து நடந்து சென்றேன்.

30 வருடங்கள் கழித்து மருத்துவமனை கட்டிலில் எனது கடைசி மூச்சுக்களை சுவாசிக்கும் நேரத்தில் என் பக்கத்தில் யாரும் இல்லை. அனாதையாக இந்த உலகத்தை விட்டு கிளம்பப்போகிறேன். பரவாயில்லை. இதுவரைக்கும் இருந்தேனே, அதுவே ஒரு வரப்பிரசாதம். நான் எதிர்பார்த்த சந்தோஷம் திரும்பி வந்ததேயில்லை. திடீரென்று கதவு திறக்கும் சத்தம் கேட்டது. தாதி உள்ளே வந்தாள். அகத்தின் வலியை முகத்தில் கண்டறிந்து என்னைப் பார்த்துக் கேட்டாள்,

 "என்னா பா யோசிக்கிரிங்க?".

ஒரு மாசாமாக என் கூட இருந்த ஒரே உயிர் அவள்தான். என் கடைசி தோழி. அவளை பார்த்து சொன்னேன், "எனக்கு என்னமோ இன்னிக்குதான்னு தோனுதுமா. நீங்க போய் டாக்குமெண்ட் எல்லாம் தயார் செய்யுங்க." அவள் சிரித்துக்கொண்டே எனக்கு ஊசி போட்டாள்.

 "இத தான் ரெண்டு வாரமா சொல்லிக்கிட்டு இருக்கீங்க. போற மாதிரி தெரியலயே."

 நானும் மெல்ல சிரித்தேன்.

 "பாக்குறதுக்கு  என் மனைவி மாதிரி இருக்கியே. அவள பத்தி சொல்லிருக்கேனா?"

 "அழகா இருப்பங்கேனு சொன்னிங்க. உங்கள பார்க்க வருவாங்கனு சொன்னீங்க. இது வரைக்கும் ஆளையே காணும்."

மறுபடியும் மெல்ல சிரித்தேன்.

"எதுக்காக அவளை விட்டு கிளம்பினேன்னு சொல்லலேயே."

தாதியும் ஆவலுடன் பக்கத்தில் உட்கார்ந்தாள்.

"ஷிஃப்ட் முடிஞ்சுருச்சு. சொல்லுங்க."

 "படிக்கிற காலத்திலேயே காதலிச்சோம். ஆனா கல்யாணம் ஆன பிறகு எங்க உறவு கொஞ்சம் மாறுனது. தூங்கும்போது குறட்டை விடுவாள். அது எரிச்சலாக இருந்தது. நானும் தட்டுகளை ஒழுங்காக கழுவமாட்டேன். அதற்கு என்னை ஏசுவாள். அவளைப் பற்றி யோசிக்கும்போதெல்லாம் சந்தோஷமாக இருக்கும். ஆனால், கூட தங்கும்போது என்னான்னு தெரியில, கஷ்டமா இருந்தது. தினமும் சண்ட போடுவோம். கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் ஒருவரை ஒருவர் சமாதானப்படுத்திக்குவோம். மறுபடியும் சண்டை போடுவோம். காலம் போக போக, அது சரி இல்லைனு எங்க ரெண்டு பேருக்கும் தெரியும். பிரியலாம்னு முடிவெடுத்தோம். கஷ்டம்தான், ஆனால், தூரத்திலிருந்து காதலிக்கலாமே. ஒருவர் செத்த பிறகும் அவரை காதலிக்கலாமே. சரி மறுநாள் கிளம்ப நினைக்கும்போது அவள் வந்து சொல்றாள், கற்பமா இருக்காள்னு. இந்த நிலமைல விட்டு போகக்கூடாதுன்னு சொல்லி ஒன்பது மாசமா அவள் கூடவே இருந்தேன். அவ்வளோ பெரிய மாற்றம்லாம் இல்லை. பிள்ளை பிறந்ததுக்கு அப்புறம் நான் கிளம்புவேன்னு எங்க ரெண்டு பேருக்கும் தெரியும். அப்படியே வாழ்ந்தோம். ஒரு நாள் கேட்டேன், குழந்தை யாருக்குன்னு. சந்தேகமே இல்லாமல் அம்மாவுக்கு தான் போகணும்னு அவள் சொன்னாள். இது நியாயம் இல்லையே. எனக்கும் பிள்ளை தானே. ஒரு முட்டாள்தனமான யோசனை வந்தது. குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் யாரை முதல கூப்பிடுறாளோ, அவருக்கு தான் குழந்தை போகும்னு சொன்னேன். மனைவியும் ஒத்துக்குட்டாள். குழந்தையும் பிறந்தது. அவள் இல்லாத நேரத்தில் நான் குழந்தைகிட்ட போய் அப்பா அப்பான்னு சொல்லி விளையாடுவேன். அவள் அம்மாவும் நான் இல்லாத நேரத்தில் அப்படி செய்திருப்பாள். 7 மாதங்களுக்கு பிறகு ஒரு நாள் நான் தனியா செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்தேன். குழந்தை தொட்டிலில் படுத்திருந்தது. திடீரென்று அப்பா என்று கத்தினாள். ஆனால், என் மனசு சரியில்லை. பேச ஆரம்பித்தாள் என்று தெரிந்து அவளிடம் சென்று அம்மா அம்மா என்று சொல்லிக்கிட்டே இருந்தேன். ஒரு வழியாக அவளும் அம்மா அம்மா என்று சொன்னாள். அவளை தூங்க வைத்து நானும் பெட்டி எல்லாம் பேக் செய்ய தொடங்கினேன். அவள் அம்மா வீட்டிற்கு வந்தாள். கதவு மூடும் சத்தம் கேட்டு குழந்தை எழுந்து அம்மா என்று கத்தினாள். அம்மாவும் அவளை தூக்கிட்டு அழுதாள். நான் அறையை விட்டு கிளம்பினேன், வீட்டை விட்டு கிளம்பினேன். கடைசி முறை திரும்பி பார்த்தேன். அம்மா அழுதுக்கொண்டிருந்தாள், குழந்தை சிரிச்சிகிட்டே என்னைப் பார்த்தாள்..... கொஞ்சம் தண்ணி கொடுங்கமா…. மா?"

 திரும்பி பார்த்தேன். தாதி கண்ணிலிருந்து கண்ணீர் கொட்டியது. "அப்பா?"

bottom of page