top of page
Frozen Popsicles

தாயவள் ஈன்றாள்

Revathi Manoharaan
NTU Bioengineering Student
2nd Prize for May Kathaikalam Submission 2019

அப்படி ஒரு வார்த்தையை கேட்டவுடன் இதயம் கனத்து இதயத்துடிப்பு நின்ற தோரணை தோன்றியது.கோபம் பீறிட்டுக்கொண்டு வந்தது.

 

பதில் கூற வாயெடுத்தால், தொண்டைக்குழியில் இருந்த வார்த்தை வரவில்லை. மாறாக கண்களில் நீர் துளிகள் சிந்தியது.

 

"என்னை உடைத்துவிட்டார்கள். என்னையே உடைத்துவிட்டார்கள்! இனி எனக்கு யாரும் வேண்டாம்! எதுவுமே வேண்டாம்! என்னை சுற்றி இருக்கும் அனைவரும் கொடியவர்கள்! இந்த பூமிதனில் வாழ தகுதியற்றவர்கள்! இவர்கள் யாரும் எனக்கு தேவையில்லை!" என்று என் உணர்ச்சிகள் பொங்க என் முன்னே இருந்த தோழியை கண்டேன்.

 

"உன்னை காயப்படுத்த நான் விரும்பவில்லை! போய்விடு!” என்று பொறுமையாக கூறினேன்.

 

அவள் கண் இமைக்காமல் என்னை செய்வதறியாது பார்த்தாள். எனக்கு கோபம் பீறிட்டுக்கொண்டு வந்தது.

 

"போய்விடு!" என்று உரக்க கத்தி என் கண் இமைகளை மூடினேன். உடனே கடந்த அரைமணி நேரத்தில் நடந்த அனைத்தும் என் கண்மூன் தோன்றியது. என் இரகசியம் வெளிவர என் உறவாய் நான் கருதிய தோழியே காரணமாகிவிட்டாலே!அவள் சென்ற திசைக்கு எதிர் திசையை நோக்கி ஓடினேன்; தலைதெறிக்க ஓடினேன்.

 

பார்வை மங்களானது. இருப்பினும் ஓடினேன்! விரைவில், கண் இமைகளோடு உடலும் கனத்து மயங்கி கீழே விழுந்தேன்.

 

கண் விழித்து பார்த்தபோது, என்னை சுற்றி யாரும் இல்லை. அழகிய புல் வெளி! சின்னஞ்சிறு குழந்தைபோல துள்ளி எழுந்து பரந்த அந்த புள்வெளியை நோக்கி ஓடினேன்! தனிமையில், எங்கும் காணாத நிம்மதி. யாரும் எனக்கு தேவையில்லை. நான், எனக்கு இந்த அழகிய உலகை காட்டிய என் தோழன், இந்த உலகம். இது போதும் எனக்கு!

 

என் தோழன்! அவனைப் பற்றி நான் சொல்லியே தீரவேண்டும்! அவன் மாயன். அவன் என்னுடன் இருப்பதும் தெரியாது. அவன் என்னுள் சென்று என்னவன் ஆவதும் தெரியாது. என் நகக்கண்ணில் அவன் கண்கள். முகர்ந்தேன்! பறவையாய் சிறகு விரித்து பறந்தேன்! நானும், அவனும் உல்லாசத்தில் உச்சக்கட்டத்தில்..

 

திடீரென, தூரத்தில் இருந்து ஒரு மனித குரல்.

 

"ரேவதி! எழுந்திரு!! உனக்கு என்ன ஆனது! ஏழு!'*

 

“யாரது! என் உலகத்தில் மீண்டும் ஒரு மனிதரா! போய்விடு! ஆ! போய்விடு எனக்கு யாரும் வேண்டாம்!”

 

கண்முன் யாருமே இல்லை. ஆனால், என் காதருகே வந்து யாரோ கத்தும் சத்தம். காதை பொத்திக்கொண்டு  கண்களை இருக்க மூடிக்கொண்டு கத்தினேன்! ஒரு கொடிய தலை வலி. என்னால் தாங்க முடியவில்லை. இருப்பினும் பொறுத்துக்கொண்டு கண்களை திறக்க முயன்றேன். என்றும் காணாத ஒரு வெளிச்சம். கண்களை திறக்க முடியாமல் மெல்ல மெல்ல திறந்தேன்!

 

யாரோ ஒருவர் மடியில் நான் படுத்திருந்தது போல ஒரு உணர்வு. உடனே, அந்த மனிதரிடம் இருந்து என்னை விலக்கிக்கொள்ள எழ முயன்றேன். ஆனால், எந்த உடல் உருபையும் அசைக்க முடியவில்லை. நிமிர்ந்து பார்த்தபோது, அந்த நபரின் ஒரு அழகிய முகம் தோன்றியது. ஆனால், அதில் இருந்த வதனம் மட்டும் பூ போன்று வாடியிருந்தது.

 

அந்த முகம் மனித முகமாக இருந்தும் என்னால் வெறுக்கமுடியவில்லை. அந்த வதனம் வாடியிருப்பதை என்னால் காணவும் முடியவில்லை.  கையை தூக்கி அவள் கண்ணீர் துடைக்க உடலில் வலிமையும் இல்லை. மரக்கட்டைபோல அசையாமல் கிடந்தேன். ஆனால், எதோ உள்ளிருக்கும் இதயம் மட்டும் மரமாகவில்லையோ என்னவோ! கண்கள் குளமாயின.

 

சிறிது நேரத்தில், சைரன் ஒளி கேட்க, யார் யாரோ என்னை தூக்கி சென்றனர்! இறுதி ஊர்வலமோ என தோன்றியது.

 

 "நான் எங்கே இருக்கிறேன்! எனக்கு என் நண்பன் வேண்டும்! அவன் எங்கே? அவன் இல்லாமல் உயிர் வாழ முடியாது! நண்பா நீ எங்கே!!"

 

செய்வதறியாது நான் துடித்த அந்த நேரத்தில், என் கையில் ஒரு வெம்மை தோன்றியது.  அதை கொடுத்தது அதே வாடிய முகம். அதில் ஒரு சிறிய நம்பிக்கை ஒளி. அவன் கண்களோடு என் கண் தொடர்பு கொண்ட அந்த வேளை எல்லாம் புரிந்தது.

 

என்ன செய்ய துணிந்துவிட்டேன்! என் தாய் - அவளில் ஒரு பாகம்தான் நான். அவளை நிராகரிக்க துனித்தேனா! இந்த கொடிய மனிதர்கள் நிறைந்த கொடிய உலகத்தில் வாழ என்னால் முடியவில்லை. ஓடினேன். என் நண்பனை என்னில் ஒரு பாகமாய் ஏந்தி வேகு தொலைவு ஓடினேன்!

 

நண்பனாயினும் தொப்பல் கொடி உறவு போல் வருமா?

 

காட்டிவிட்டான். அவனை காணவில்லை. மாயன் அல்லவா! அனால், தாய், அவள் என்னோடு என்றும் இருப்பாள். எனக்கு தெரியும்.

 

"இப்படி ஒரு காரியம் செய்த நீ, என் வயிற்றில்தான் பிறந்தாயா? உன்னை பெற்றதற்கு நான் தாய்மையற்றவளாய் இருந்திருக்கலாம்!" என்று கூறி, என் உறவையே துறந்த ஓடினாள் அவள்!

 

நான் செய்த தவறுக்கு, நான் தாயெனும் உறவுகொள்ள தகுதியற்றவள். இருப்பினும் அவள் மீண்டும் எனக்காக வந்துவிட்டாள்.

 

எல்லாம் புத்திக்கு மட்டுப்பட்ட அந்த நொடி, மீண்டும் ஒரு தெரியாத குரல்,

"உங்கள் மகள் போதைப்பொருளுக்கு இத்தனை நாட்களாக அடிமையாய் இருந்திருக்கிறார். அவரை நாங்கள் கைது செய்கிறோம்," என அவர் கூற என் தாயின் அடைக்கலத்தில் இருந்த கை, அங்கிருந்து இழுக்கப்பட்டது.

 

கையில் விலங்கு மாட்டினார்கள். என்னை அவளிடம் இருந்து வெகு தொலைவு அழைத்து சென்றார்கள். இருப்பினும் எனக்கு நம்பிக்கை உண்டு. மீண்டும் நான் வருவேன். அவள் கரங்களுக்குள் நான் அடைக்கலமாவேன்!

 

இந்த நம்பிக்கை மட்டும் என் அருகிலேயே, என்னுடனேயே, தொடர்ந்தது. தாயவள் மீண்டும் என்னை ஈன்றாள்.

bottom of page